தொடர்புடைய கட்டுரை


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புற்களின் பங்கு

Dr. பா. சாம்ராஜ்

31st Mar 2019

A   A   A

நம்மைச் சுற்றியுள்ள இயற்கை புல்வெளிகளும், தாவரங்களும் இறைவன் மனிதனுக்கு அருளிய மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இறைவனின் படைப்பில் புற்களும் மரங்களுமே முக்கியமாக இருந்ததாகவும் அதில் புற்கள் மூன்றில் ஒரு பங்கை வகிக்கின்றன என்றும் காண்கிறோம். பச்சைக்கம்பளம் போன்று பசும்புல் போர்வை மலைப்பிரதேசங்களில் காணப்படுகிறது. இவை இயற்கை காடுகளை மேம்படுத்தி கண்களுக்கும் விருந்தாக அமைகிறது. “மாம்சமெல்லாம் புல்லிலிருந்து தோன்றின என்ற வாக்கின்படி புற்களே எல்லா ஜீவராசிகளுக்கும் குறிப்பாக விலங்குகள் மற்றும் மனிதனுக்கும் அடிப்படையானதாகும். புற்கள் தாவர வகைகளின் முன்னோடியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

புற்களினால் கிடைக்கப்பெறும் பலன்களும் நன்மைகளும் ஏராளம். இதில் முக்கியமானது மண்வளப் பாதுகாப்பு ஆகும். உலகளவில் 70 சதவீத நிலப்பரப்பில் உணவுக்குகந்த புல்வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பான்மையானவை கால்நடைத் தீவனமாக பயன்படும் புல்வகைகளாகும். இந்த கால்நடைத் தீவனங்கள் தானியங்களிலிருந்தும், பயறுவகைகளிலிருந்தும் மற்றும் சில தாவரங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன. மூங்கிலும்கூட ஒருவகை புல்இனத்தைச் சார்ந்ததாகும். மூங்கில் இலை யானையின் தீவனமாகப் பயன்படுகிறது.

இயற்கை புல்வகைகள் பலவகைப் படுகின்றன. இவைகளில் பல மூலிகைகளாக (ராமச்சம்புல், எலுமிச்சைப்புல்) மருத்துவப் பயன்பாட்டிலும் உள்ளன. நமக்கு உணவு தரும் நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் கரும்பு போன்றவைகளும் புல் இனத்தைச் சார்ந்ததாகும். சிலவகைப்புற்கள் பாய் (கோரைப்புல்), கூடை (மூங்கில்), வீட்டுக்கூரை (தருவைப்புல்) முதலியவை வேய்வதற்குப் பயன்படுகின்றன. கிறிஸ்மஸ்குடில் அமைக்கப்படுவதும் ஒருவகைப் புல்லினால்தான் (சுக்குநாறிப்புல்) என்பதை நாம் அறிவோம். அழகியப்புல்தரை (லாண்) அமைப்பதில் புற்களின் பங்கு மிகுதியாக உள்ளது. அது வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தை அழகுபடுத்தி, கண்களுக்குக் குளுமையாக அமைகிறது. 

புற்கள் இயற்கையாக தழைத்து வளருமிடங்களில் நிலத்தடி நீர் வளமுண்டு எனவும், அவைகள் கருகிப்போகும் காலங்கள் வறட்சிக்காலம் எனவும் சொல்லப்படுகிறது. கால்நடைகள் புல்வகைத்தீவனங்களை உட்கொண்டு, நமக்கு பால், இறைச்சி போன்ற உணவையும் சாணம் போன்ற இயற்கை உரத்தையும் தருகின்றன. பசுமைப் புரட்சியோடுகூட வெண்மைப்புரட்சியும் இவ்வாறே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதிவாசி மக்கள் இந்த இயற்கை புல்வெளிகளில் அலைந்து திரிந்து, ஆடுமாடுகளை மேய்த்து, பராமரித்து, அவைகளிலிருந்து கிடைக்கப்பெறும் உணவுகளைக் உட்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

புற்களுக்கு எந்தக்கால நிலையையும் தாங்கி வளரும் தன்மை உண்டு. புற்களின் அடர்த்தியான வேர்பாகங்கள் மண்ணைக் கெட்டியாக இறுகப்பிடித்து, மண் அரிமானத்தைத் தடுத்து மண்வளத்தைப் பெருக்குகிறது. மண்அரிப்பைத் தடுப்பதில் புற்களின் பங்கு மிகப்பெரியதாகும். கடலோரங்களில் மண்அரிப்பைத் தடுப்பதில் ராவணா மீசைப்புல் போன்ற புல்வகைகள் உதவுகின்றன. உயர்ந்த மலைப்பிரதேசங்களில் சவுக்குப்புல் (ஏரக்ராஸ்டிஸ்), நிலப்படிமட்டங்களைப் பாதுகாக்க இவை ஏதுவாக அமைந்துள்ளன.

புற்கள் பெரும்பாலும் சூரிய ஒளியிலும், ஒரு சில புற்கள் மரங்களுக்கு அடியில் நிழலிலும் வளருகின்றன. கடல் நீரில் வளரும் புல் வகைகளைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கின்றது. நன்னீர் நிலப்புற்களில் சிலவகைகள் புவி மாசடைவதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக உள்ளன. டைஃபா என்ற புல்வகை இதற்கு உதாரணமாகும். சிலவகை புற்கள் பெரணி செடியோடு சேர்ந்து வளர்ந்து, பசுமையாகக் காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு ஆதாரங்களான இடங்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

இந்நாட்களில் இயற்கைப் புல்வெளிகள், முக்கியமாக மலைப்பிரதேசங்களிலுள்ள மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதைக் காண்கிறோம். காட்டுத்தீயினாலும்; புல்வெளிகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் புல்வெளிகளில் பணப்பயிர்களான ரப்பர், தேயிலை, காப்பி, தென்னை, கிராம்பு போன்றவைகள் பயிரிடப்படுகின்றன. தென்னந்தோப்புகளில் உடுபயிராகவும் சில புற்கள் வளர்க்கப்படுகின்றன. ஆற்றோரங்களிலும், விளைநிலங்களிலும் கூட பசுமைக்காடுகளும், புல்வெளிகளும் மாற்றப்பட்டு பணப்பயிர்களை திட்டமிடாமல் செங்குத்தான சரிவுகளில்கூட பயிரிட்டு வருகிறார்கள். இதனால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, இயற்கை சமநிலைமாறி, சுற்றுச்சூழல் சமநிலையில் சீர்கேடுகள் ஏற்பட்டு, வறட்சி நிலை உருவாகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், கட்டுக்கடங்காத குடியிருப்புகளாலும் காடுகள் மற்றும் புல்வெளிகள் அழிக்கப்பட்டு, வருடாந்திரப் பயிர்களும், பணப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றின் விளைவாக மண் அதிகமாக அரிக்கப்படுகிறது. ஆறுகளில் சேற்று நீர் மற்றும் வண்டல் படிந்து கீழேயுள்ள ஏரிகளையும் குளங்களையும் மற்றும் பள்ளத்தாக்குகளையும் இவை அரித்து வண்டல் மண்ணால் மூடிவிடுகிறது.

தற்போது வளம் குன்றிக் காணப்படும் இயற்கைப் புல்வெளிகளில் மேய்ச்சல் நில மேலாண்மையாக விவசாயிகள் பின்பற்ற வேண்டிய சில தொழில்நுட்பங்களைப் பார்ப்போம். நம் மேய்ச்சல் நிலங்களில் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக காணப்படுவதால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் வழிமுறைகளில் சிலவற்றை காண்போம்.

1) இயற்கையாக வளர்ந்திருக்கும் மகசூல் குறைவாகக் கொடுக்கும் புல் வகைகளை அழித்துவிட்டு அதிக மகசூல் கொடுக்கும் கோ-1 நீலக்கொழுக்கட்டைப்புல்லை மழைக்காலத்தில் பயிர் செய்ய வேண்டும்.

2) புல்லுடன் பயறு வகைத் தீவனப் பயிரான முயல்மசால் மற்றும் சங்குப்பூவை 3:1 என்ற விகிதத்தில் பயிர் செய்வதால் சத்து மிகுந்த தீவனத்தை மேய்ச்சல் நிலத்தில் இருந்து பெறமுடியும்.

3) மேய்ச்சல் நிலங்களில் ஆங்காங்கே தீவன மரங்களான கருவேல் மற்றும் வெல்வேல் பயிர் செய்யலாம். அப்படி பயிர் செய்வதன் மூலம் கோடைக்காலங்களில் புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்களின் உற்பத்தித்திறன் குறையும்போது மரத்தின் இலை மற்றும் காய்களை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு மரங்கள் நிழல் தருவதோடு, மரங்களின் வேர்கள் நிலத்தின் ஆழமான பகுதியில் இருந்து தங்களுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டு மரத்தில் இருந்து உதிரும் இலைகள் மூலம் நிலத்தின் மேல் பாகத்தின் வளத்தை அதிகரிக்கிறது.

4) மேய்ச்சல் நிலங்களைப் பராமரிப்பதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. மேய்ச்சல் நிலத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வேலி அமைத்து, கால்நடைகளை சுழற்சி முறையில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாகும்.

5) மேய்ச்சல் நிலத்தின் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு கால்நடைகளின் எண்ணிக்கையை மேய்சலுக்கு அனுமதிக்க வேண்டும்.

6) 10 அடி இடைவெளிகளில் சரிவின் குறுக்காக சிறுவரப்பு அமைத்து, தகுந்த புல்வகைகளோடு, பயறுவகைத் தீவுனப்பயிர்களைப் பயிர்செய்வதால் மண்ணின் தரம் உயர்த்தப்பட்டு, புற்களின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. தாவரங்களையும், குறிப்பாக புல் வகைகளையும் பயன்படுத்தி, மண் மற்றும் நீர்வளத்தைப்பேணும் முறை பிரபலமாகி வருகிறது. அதற்கு வெட்டிவேர்ப்புல் அதாவது ராமச்சம்புல்லை சம மட்டக்கோட்டில் வரப்பு வைத்து நடும்போது, அது மழை நீரையும் அங்கேயே தேக்கி வைத்து, அந்த நீரை வெளியே செல்லாமல் தடுத்து விடுகிறது. இவ்வாறான முறைகளில் மண்அரிமானம் தவிர்க்கப்பட்டு, விளைச்சல் அதிகரிக்கிறது. பண்ணைக் காடுகளை உருவாக்கவும் இந்த புல்வகைகள் ஏற்றதாக அமைகின்றன.

புல்வகைகளை இறவைத்தீவனப்புற்கள் என்றும், மானாவரித் தீவனப்புற்கள் எனறும் பிரிக்கலாம். இறவைத் தீவனப்புற்களை தண்ணீர் வசதி உள்ள இடங்களில் பயிர் செய்யலாம்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.